Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Tuesday, November 10, 2020

இரகசியக் காத(லி)(லன்)


 















பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும்

அதை வார்த்தைகளால் வரிகளால் 

விபரிக்க தயங்கிய உள்ளங்களே

இரகசியக் காத(லி)(லன்)


எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் எல்லைத்தடுப்பிட்டு ஏமாற்றத்தினை

இரட்சிக்க விரும்பாத ஒருதலைக்காதலர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


முகநூலில் கள்ளமாய் உன் புகைப்படம் 

நோட்டமிட்டு எச்சிற்படாத முத்தச்சுவடு

நித்தம் பதிப்பதில் வல்லவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


நீ கண்விழிக்கும் நேரமறிந்து 

உன்னை முந்தி உன் முகம் தரிசிக்க

கண்ணயறாது காத்திருப்பவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


உன் பார்வைக்காய்ச்சலில் தினம்

தீக்குளியல் செய்ய ஸ்நானத்தின் போது

மாயைக் காட்சியில் நாணம் கொள்வார்கள்

இரகசியக் காத(லி)(லன்)


தொண்டைக்குழியில் ஒருபருக்கை சோறு நுழைவதற்குள் எண்ணக்கருவில் உன் ஆயிரம் நினைவணுக்களை சுமப்பவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


நிஜத்தில் காதல் பேச மறுப்பவர்கள் 

கனவு உலகத்தில் சிறப்பாய் வாழ்க்கை வாழ 

பல இரவுகள் கண்விழித்து உறங்குபவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


தூரத்து நிலவு நம்மைத் தொடர்வதாய் 

எண்ணியே பிள்ளைப்பிராயம் கழியாமல் 

இன்றும் தொடரும் கதையில் கதாநாயகர்கள்

இரகசியக் காத(லி)(லன்)




Wednesday, October 28, 2020

நான் என்றும் என்னுடன்


 














நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


என் கண்களில் கண்ணீர் வரும்போதொல்லாம் 

என் கரங்கள் துடைத்துவிடுகின்றன

என் வழிப்பயணத்தில் என் பாதங்கள் 

முன்னேறிச்செல் என்று தட்டிக்கொடுக்கின்றன

என் பேச்சுக்களை என் மனம் செவிசாய்க்கின்றன 

மூளை அதைச் செய்ய எத்தனிக்கின்றன

என் கைவிரல்கள் படபடப்பான நேரங்களில் 

என் கை கோர்க்கின்றன

என் கண்கள் நான் மனச்சோர்வடைந்த நிலையில் 

என்னோடு விழித்திருக்கின்றன

இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

இல்லை

நான் துணிச்சலான மனதுடன் 

அன்றாடம் போராட்டங்களில் 

வெற்றி வாகை சூடிக்கொள்கின்றேன்

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

இல்லை

நான் சுயமரியாதையுடனும் தன்நம்பிக்கையுடனும் 

நீண்ட கால உறவில் இருக்கின்றேன்

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

இல்லை

நான் தீர்மானிக்கும் முன் நியதி நேர்மை 

மனசாட்சியிடம் 

ஒப்புதல் பெறுகின்றேன்

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

இல்லை

நான் மனதிடம் நேசிக்க மட்டுமே 

கற்றுக்கொடுத்திருக்கின்றேன் 

அழுத்தங்களை கண்ணீரோடு 

பகிர்ந்துகொள்கின்றேன்

எப்பொழுதும் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்






என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Monday, July 20, 2020

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்


















நான் மீண்டும் புதிதாக 

உனக்கு அறிமுகமாகின்றேன்


என் முழுப்பெயர் முதல் 

செல்லப்பெயர் வரை அறிய

நீ மீண்டும் முயன்றுகொள்


உனக்கு ஆவலான அலாதிப்பிரியமான

விடையங்களை அறிய மீண்டும் 

வினாக்களைத் தொடுக்கின்றேன்


நீண்ட உரையாடல்கள் நீளமான இரவுகள்

பகட்டான பகல் மாலை வேளையும் தாண்டி

புதிய ஒரு தினத்தை மீண்டும் அமைக்கட்டும்


மணித்துளிகளுடன் உன் நினைவுத்துளிகளும்

ஒட்டிக்கொண்டு நிமிடமுள் ஸ்தம்பித்துப்போகட்டும்


கைவண்ணங்கள் பல உன்வண்ணம் 

காண்பித்தலில் வெகுமதி பெற்ற இறுமாப்பு 

இதயத்தில் மீண்டும் துடிக்கட்டும்


புரிந்துணர்வற்ற புரிதல்கள் மூண்டுபோன 

கசப்பு வார்த்தைகள் பரிசுத்தமான அன்பை

மீண்டும் பரிசீலிப்பதை தவிர்த்துக்கொள்ளட்டும்


நான் என்னையும் நீ உன்னையும் நேசிக்கச்செய்யும்

பரிபாசை யுக்திகள் நிலைக்கண்ணாடி விம்பத்தில் 

மீண்டும் இரசிக்கும் இரசணையூட்டட்டும்


நீ நீவீராய் செல்ல நான் நலிவுற்றுப்போக 

சங்கடமான சந்தேகத்தேக்கத்தில் நறுமலரும் பூக்க மீண்டும் கடிகார முட்கள் சுழறட்டும்


பழைய புத்தகத்தில் புதிய அத்தியாயம் 

சுவாரஸ்யமான 

பகுதிகளை மென்மையான 

தோகை கொண்டு புனரமைக்கட்டும்


மீண்டும் மீண்டும் அறிமுகமாகும் 

புதியவர்கள் போல்

தேடலும் போலி ஊடலும் 

ஊக்கமளிக்கும் உறவுவிற்காய் 

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்







Wednesday, June 10, 2020

மதுகிண்ணமும் கதைபேசும்



















கண்ணே உன் நினைவுகள் எல்லாம்

கற்பனைக் கனவுகளாய் கலைத்திட

கையில் ஏந்தினேன் மதுக்குவளை

கவலைகள் தீர வேறு மருந்தில்லை


குவளை வளைவுகளை உன்

கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்

கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்

கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்


கிண்ணத்தின் கழுத்துப்பிடியை

கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்

கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்

கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்


கூவும் முகமறியா கருங்குயிலும்

கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்

காலைவேளையில் துயில் களைய

கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள் 


கேலியாய் நோட்டம் விடும் அயலவர்

கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட

கோமாளி நான் மாது உன்னை மறக்க 

கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்


கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு

குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்

கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை

குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்


களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி

கைவளையலாய்  கடிவாளமிட

கையில் குவளையின் முகமும் அவள் 

கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்


கதை கதையாப் பேசுகின்றேன்

கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து

கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து

கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே

கணத்த காதல் கசடிலிருந்து



Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...