Tuesday, December 31, 2024

பெண்ணுக்குள் தேவதை

 


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் வர்ணமற்றவள்

அவள் உருவமற்றவள்

அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு

உணர்ச்சிகளாய் உருவம் கொள்கிறாள்


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் அன்பின் அர்த்தமாய்

அரவணைப்பின் அற்புதமாய்

அகத்தின் தேவைகள் தானாய் அறிந்து

அடுக்களையும் தாண்டி அபூர்வம் காண்பிக்கின்றாள்


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் கோபங்களில் அக்கறை

அவள் கண்ணீரில் ஏக்கம்

அவள் மௌனங்களில் விரக்தி

அனைத்தையும் மனமெனும் 

 பெட்டகத்தில் பத்திரமாய்

பூட்டிவைத்தே பொக்கிஷமாகின்றாள்


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் துடிதுடிக்கும் பட்டாம்பூச்சியின்

இறக்கைகளுக்கு ஈடாய் ப்ரியமானவர்களுக்காய் 

என்றும் துடித்துக்கொண்டு எண்ணத்தில் 

வாழ்க்கை நடத்துகின்றாள்


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் போலியாய் கபடநாடகம் நாவில் விஷம்

கண்களில் வேடம் பூண்டு நடமாடும் ஓநாய்கள்

மத்தியிலும் புத்தியாய் சுதாகரித்து

தன்நிலை மாறாத தைரியசாலியாகின்றாள்


பெண்ணுக்குள் புதிதாய் ஓர் 

தேவதை பிறக்கின்றாள்

அவள் மூர்க்கமான தன்நலவாதிகள்

ஈட்டியாய் குத்தும் கூரிய வார்த்தைகளுக்கும்

மனம் நெகிழும் துரோகச்செயல்களுக்கும்

லேசான புன்னகை வீசி கடந்து செல்கின்றாள்








Friday, December 27, 2024

பூலோகம் தாண்டி ஒரு இரயில் பயணம்




 பூலோகம் தாண்டி ஒரு இரயில் பயணம் 

இரு இருக்கைகள் மட்டும் கொண்ட இரயில் பெட்டிக்குள் அவனும் நானும் மற்றும் கொஞ்சம் காதலும்


முடிவில்லா பயணம் காணவே

முடிவிலியாய் தண்டவாளம் ஓடிட

வானுயர்ந்த சோலை குறுகிட

காதல் ஊர்வலமாய் இரயில் போகுதே


அவன் மார்போடு தலையை சாய்த்து

நான் பயணம் செய்யும் அழகைப் பார்க்க

பகலெல்லாம் சூரியனும் இரவெல்லாம் சந்திரனும்

மூச்செடுக்க வெகுதூரமோடி பின்தொடருதே


பூமியில் உள்ள தேடல்களைக்காண 

விண்மீன்களின் கோர்வையை பாய்விரித்தே

வெண்ணிலவை கட்டி பூமியில் நட்டுவைத்து 

ஜோடியாய்  நாம் போகிறோம் இந்த இரயில் பயணம்


என்னவனின் உறக்கம் கலையாது நீள

மடிமீது மிருதுவாய் தலைகோதி தாலாட்டிட  

ஆனந்த பைரவி ராகம் மீட்டிய தேன்சிட்டுகளோடு

நத்தை நகர்வலமாய் இரயில் போகுதே


காலமும் கடிவாளமிட மறந்துவிட

பாதைகளும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்க

பக்கத்தில் பச்சைபசேல் தலையசைத்து வாழ்த்துக்கூற

பட்டாம்பூச்சிகள் இரயிலுக்கு பாதை காட்டுதே


மழைச்சாரலும் தேநீர் தந்து வழியனுப்பி வைக்க

மயில் தோகை தந்து துயில் எழுப்ப

மேகங்கள் வானிறங்கி துகில் கொடுக்க

காற்றோ காதோடு வந்து கூந்தல் சரிசெய்யுதே


தேனீகளும் தேன் சொரிந்து வாழிய என்றே 

வாழ்த்தியனுப்பும் பூலோகம்தாண்டி 

இரு இருக்கைகள் கொண்ட இரயில் பெட்டிக்குள் 

அவனும் நானும் மற்றும் கொஞ்சம் காதலும்





பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...