Tuesday, February 26, 2019

எப்படி உன்னைத் திருமணம் செய்வது?



காலையில் என்னை விழிக்கச் செய்வது
நீ அனுப்பும் குட்மோர்னிங் குறுந்தகவல் தான்
தூக்கத்தில் நானும் அதற்கு பதில் 
அளித்துவிட்டு என் வேலைகளைப் பார்க்க
புறப்பட்டுவிடுவேன்
தினமும் என்னுடன் உரையாடினாலும்
மாறாத சில கேள்விகளை நீயும் கேட்பாய்
சலிக்காமல் நானும் அதற்குப் பதில் சொல்வேன்
தினமும் வார்த்தையால் விருந்துபசாரம்
செய்திடுவாய் ஆங்காங்கே நான்
இரசிக்கும்படி என்னை வர்ணித்தும்விடுவாய்
கண்ணியமாக என்னுடன் நடந்திடுவாய்
உன் வேண்டுதல்களை என் அனுமதிபெற்றே
செய்திடுவாய் என் இன்பதுன்பங்களில்
தவறாமல் பங்கெடுப்பாய்
என்னைத் தாலாட்டும் இனிய மெல்லிசையாகவும்
மலர்ந்திடுவாய்
நேரடி சந்திப்புக்களை மேற்கொள்ளவே
தவமாய் தவமிருந்திடுவாய்
வேண்டாம் எனக் கடிந்து கொண்டாலும்
சிறுபிள்ளைபோல் அதை மறந்திடுவாய்
வேலைப்பழுவில் சாய்மனை நாட்காலியில்
நீ சரிந்த போதும் என் நலன் விசாரிப்பதில்
நீ இளைப்பாறுவாய்
இத்தனை அழகாய் ஒரு ஆணால்
பாதுகாப்பான உலகமொன்றை உணரமுடியுமா
என வியப்பில் பலமுறை ஆழ்த்தியுள்ளாய்
கடைசியில் என்னைத் தூக்கிவாரிப்போடுவதுபோல்
ஒன்று கேட்டாய்
அது வேறு ஒன்றுமில்லை
எனக்கும் உனக்குமான திருமணம் தான்
என்னிடம் இருக்கும் குறைகளைக் கூறு
என்னை மாற்றிக்கொள்கின்றேன்
என மன்றாடுகின்றாய்
உன் நடை உடை பாவனைகளை
என் விருப்பப்படியே மாற்றிவிட்டாய்
இருந்தும் ஏன் என்னை நிராகரிக்கின்றாய்
எனக் கேள்வி கேட்கின்றாய்
இதோ உனக்கான ஓர் பதில்
அறுதியும் உறுதியுமாகச் சொல்கின்றேன்
திருமணம் என்பதில் என் மனமும்
உன் மனமும் ஒன்றாய் ஓர் மனதாய் இணையவேண்டும்
இணைந்த பின்பே இந்தபந்தம்
நீடித்து உயிர்வாழும்
உன் மனதோ என் இடத்தே நீ வைத்தாய்
என் மனதோ என்னிடமில்லை
அதை வேறொருவனிடம் தொலைத்துவிட்டு
இதயமற்றவளாய்த் திரிகின்றேன்
அதில் எப்படி நீயும் குடிகொள்வாய்?
மனம் இல்லாத ஜடம் நான்
இனி எப்படி உன்னைத் திருமணம் செய்வேன்?

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...