Saturday, March 16, 2024

நாடோடிக்காதல்


நாடோடியாய் நானும் நீயும் 

நகரெல்லம் வலம் வருவோமா

ஒரு இரவு ஒரு பகல் தாண்டி 

பயணத்தை தொடர்வோமா

ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் 

நமக்கு நாமாய் வாழ்வோமா

பாதி வழி் தொலைத்த வாழ்க்கைக்கும் 

மீதித்தூரம் வாழ்ந்திடுவோமா

போகுமிடம் சேரும் நபர் தெரியாத முகவரியைத் 

தேடித் தேடி அலைவோமா

நாடோடிக் காதற்புறாக்கள் போல் 

எல்லை தாண்டி பறப்போமா

பாய் விரித்து பல் இளிக்கும் நட்சத்திரங்கள் 

கண்மூடி எண்ணுவோமா

வான் கடந்த பயணத்திற்கு 

நட்சத்திரங்களை கூட்டிச்செல்வோமா

மழையில் குளித்து வெயில் உலர்ந்து 

புது நடை பயில்வோமா

காற்றைக்கொஞ்சம் இறுகப்பிடித்து 

தலையணை மெத்தை செய்வோமா

ஓடும் மேகங்களைத் துரத்திப் பிடிக்க 

விண்கான விரைந்து செல்வோமா 

காடு தாண்டி மலைகள் ஏறி் 

பயணத்தைத் தொடர்வோமா

சுடச் சுடச் தேநீர் மழையில் தெப்பமாய்

நனைந்துகொண்டு அருந்திடுவோமா

நெய்தல் மருதம் முல்லை கடந்து

நெடுந்தூரம் சென்றிடுவோமா

கைபேசி வீட்டில் விட்டு 

விரல்களால் பேசிச் செல்வோமா

போகும் பாதை தெரியாத கால்களுக்கு

கால்தடங்களை துணையாய் விட்டுச் செல்வோமா

தூங்கும் சூரியனை தட்டி எழுப்ப

சிகரம் தொட்ட உயரம் செல்வோமா

நிலவினை கைபிடித்து இழுத்து

வீடு திரும்பாமல் தடுத்திடுவோமா

வானவில்லின் வர்ணங்களைத்

திருடி உடை உடுத்திடுவோமா

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்

நம் காதல் கதை சொல்லிடுவோமா

பசித்த வயிற்றை சமாதானம் செய்திட

பார்ப்பவர்கள் வீட்டிற்கு சென்றிடுவோமா

பிரியும் நேரம் வயிறும் மனமும் 

இன்பத்தில் நிரம்பி விடைபெறுவோமா

கடிகாரமும் தேவையில்லை 

நேரத்திற்கு கடிவாளம் போடும் 

அவசியமும் இல்லை

எந்தன் சொப்பனம் நீள நீள

நீயும் நானும் நாடோடிகளாய் 

அலைந்து காதல் செய்வோமா



காதலும் கடந்து போகும்







சுயமரியாதையை எங்கும்

விட்டுக்கொடுக்காத பெண்

வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை 

எதிர்பார்க்காத ஆண்

இருவரிடையே என்ன உறவுதான் 

இருந்துவிடப்போகிறது?


வாழ்க்கையில் பிடித்தபாதையில்தான் 

செல்வேன் என்ற இறுமாப்பு

உடற்சோர்விலும் மனம் தளரா குறிக்கோள்

ஏதுமற்ற நிலையிலும் தன்நம்பிக்கை

நாதியற்ற நிலையிலும் 

யாரிடமும் வேண்டியே நாடிச்செல்லா

அழகிய பெண் திமிர் அவள் யாழினி


திறமையும் அறிவும் தேடாத சமூகமிது

பணமும் அரசியலும் சூழ்ச்சிசெய்யும் காலமிது

பள்ளங்களில் சறுக்கிவிழ 

பாதை நீள முட்கள் கொண்டு

ஓட்டப்பந்தயம் நடத்தும் வேடிக்கை மனித மிருகங்களிடம்

தாக்கப்பட்ட இதயத்தை தானே மருந்திட்டு

மீள் சுழற்சிக்கு தயாராகின்றாள்


அவளிடமும் ஆயிரம் கவலைகள் உண்டு

கண்ணீருக்குள் கதைகளுண்டு

சாதாரண பெண்களைப்போல் காதலும் காமமும்

கிடைத்துவிடாதா என்ற ஏக்கமும் உண்டு

இருந்தும் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது

அது அவளின் தனி அடையாளத்திற்கான அங்கீகாரம்


இத்தனையாய் சொல்லப்படும் அவள் என்ன இரும்புமனிசியா?

மனமற்று இரும்புத்திரையில் இதயம் கொள்ள?

அவள் தோள் சாயவும் 

நம்பிக்கையாய் அருகில் அமர்ந்து 

ஓர் சில வார்த்தை கேட்கவும்

இதமான பெயர் அற்ற ஓர் உறவுதான் 

அவன் கதிர்


தன்நம்பிக்கையில் சுற்றும் 

பெண்ணியவாதி அவள் 

மனம் சாய்த்து கதை சொல்லவும் 

உறவற்ற ஓர் ஆண் உருவம் அவன்


காதலன் கணவன் நண்பன் என்ற வட்டம் தாண்டி

இதமான இந்த உறவுக்கு தமிழ் இலக்கணத்தில்

வழங்கப்பட்ட மொழி எதுவோ?


அவள் மனம் அறியது ஒரு நிமிடம் அவன் கரம் பற்றி கடிகாரமுள்ளாய் கடக்கின்ற நொடிக்குள்

ஏதோ அவன் வரவில் சாதித்தவளாய் நன்றியுடன் ஒரு புன்னகையில் கடக்கும் இருவருக்குள் 

இந்தக் காதல் என்ன அதுவும் கடந்து போகும்

Wednesday, January 26, 2022

விதி


 

ஒருநாள் மட்டும் வாழும் மலர்தான்

இறப்பின் வலிதனை அறிந்திடுமா

மண்மேல் மடிந்த மலரை எண்ணி

வேர்தான் கண்ணீர் வடித்திடுமா

உதிர்ந்து விழும் சருகுகளை மீண்டும்

முன்போல் மரக்கிளைகள் தாங்கிடுமா

வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம்

மீண்டும் பழைய கூட்டில் வாழ்ந்திடுமா

இருளில் வாழும் மனிதர்களுக்கெல்லாம்

நிவலொளி வெளிச்சம் தந்திடுமா

வெளிச்சம் தரும் சிறு மின்மினிப்பூச்சி் கண்டு

நிலவொளிதான் வான்விட்டு மறைந்திடுமா

மழைநீரைக் குடிக்கும் கடலும்

நன்நீராய் ஒருநாள் மாறிடுமா

கடல்நீரைக் குடிக்கும் முகிலுக்கு

கடல்தான் சொந்தமாகிடுமா

நிஜத்தினைத் தொடரும் நிழலினை

நிஜம்தான் அள்ளி அணைத்திடுமா

அணைக்கவில்லை என்பதால் நிழலோ

நிஜம்விட்டு தனியே போய்விடுமா

விடைகள் தெரிந்த மனமோ அமைதி கொள்ளுமா

விதிதான் கதையை மாற்றிடுமா

மறைத்தாலும் மறந்தாலும் என் காதல் பொய்யாகிடுமா

தெரிந்தாலும் மீண்டும் எந்தன் கைகூடுமா

பிரியாதே


 

ஒரு கணம் ஒரு நொடியும் 

பிரிந்து போகாதே

என் உயிரே நீ பிரிந்தால் 

நான் வெறும் பிணம்தான் 

தெரிந்தும் போகாதே


மறு கணம் மறு நொடியே 

வந்து சேர்ந்து கொள்வாயோ

என் உயிரே நீ இணைந்தால் 

நான் மறுஜென்மம் கொள்வேன்

அறிந்தும் சேராயோ


கனவினிலும் கூட கலங்கிவிடாதே

கடலினை விட்டுத்தான் அலைகள் ஓயாதே

சிரிக்கின்ற உன் முகத்தை தினம் காணத்தான்

கனவினிலும் கறைகள் படிய நான் விடமாட்டேனே


நினைவுகளைக் கட்டி கூண்டில் போடாதே

நிஜத்தினை விட்டு நிழலும் பிரியாதே

விரலோடு விரல் சேர்ந்து கைகோர்க்கத்தான்

விதியோடு போராடி நான் தோற்கமாட்டேனே


தடுமாறும் நேரம் தலை சாய்த்திடவா

தோலோடு ஒருகுழந்தையென நான் தாங்கிடவா

மடிமீது தாலாட்டு நான் பாடிடவா

விரலோடு பலகதைகள் நான் பேசிடவா

மனதோடு பல சோகம் எல்லாம் கரைத்திட

மனம் தேடும் தேடல் நீ மட்டும் போதும்


சந்திப்போமா


 

யாருமற்ற வேளையில் சாலையின் ஒரு ஓரமாய்

வாடைக்காற்றைக் கொஞ்சம் கடன்வாங்கி

ஏக்கம் பாதி தயக்கம் மீதி அனைத்தையும் தாண்டி

மீண்டும் புதிதாய் சந்திப்போமா


பாதி கண்களால் உன்னைப்பார்க்க நீயோ

மீதிக் கண்களால் என்னைப்பார்க்க நாமோ

பார்வைகளில் ஸ்தம்பித்துப்போன வார்த்தைகளை

மீண்டும் புதிதாய் பேசிக்கொள்வோமா


உன் மூச்சின் வெப்பம் என்னைத் தாக்க

என்னில் உன்னால் குளிர்காய்ச்சல் வீச

இடையே நழுவிச்சென்ற தென்றல் இருவரையும் ஈர்க்க

மீண்டும் புதிதாய் சுவாசிப்போமா


உன் தலைகோதிட என் கைவிரல்கள் ஏங்க

என் நகம் கடித்திட உன் பற்கள் கூச

இடையே மந்திரப்புன்னகை வேலிபோட

மீண்டும் புதிதாய் வெட்கம்கொள்வோமா


மழைத்துளியில் வெண்நிலவு நனைய

மணற்தரையோ அதைக்கையில் ஏந்த

முத்தக்குளியல் அங்கே அரங்கேற்ற

மீண்டும் புதிதாய் காதல்கொள்வோமா


கடிகாரமுள் தன்கடமையைச் செய்ய

கணப்பொழுதில் ஒரு யுகம் ஓடி மறைய

நிகழ்ந்தவையாவும் கண்ணீரில் கரைய

மீண்டும் ஒருமுறை சந்திப்போமா


Tuesday, January 25, 2022

நான்…நீ…


 

நான் சூடும் பூக்களில் எல்லாம் 

உன் வாசம் தேடுகிறேன்

பூக்களிலும் உன் வாசம் இன்றி

காகிதமலராய் தலைகுனியப் பார்கின்றேன்


நான் காணும் காட்சிகள் யாவும்

உன் நிழற்படமாய் காண்கின்றேன்

என் விரல்கள் தீண்டி தீண்டியே

உன் புகைப்படம் காற்றில் கரையக் காண்கின்றேன்


நான் காணும் கனவுகள் யாவும்

நீ வந்து போவதாய் ஏங்கினேன்

அதிகாலையில் நீ மறைந்துவிடுவாயென்று

உதித்துவிடாதே என்றே சூரியனை தினமும் வேண்டினேன்


நான் பேசும் வார்தைகளில் எல்லாம்

உன் பெயரையே உச்சரிக்கின்றேன்

மறந்தும் உன்னை மறவாமலிருக்க

இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் மன்றாடினேன்


நான் எழுதும் வரிகளெல்லாம் 

உன் கானம் தினம் பாடிடுதே

விடும் எழுத்துப் பிழைகளுக்குள்

உனக்கான கவிதை ஒன்று தீட்டுகின்றேன்


நான் கேட்கும் ஓசைகளிலெல்லாம்

உன் இதயத்துடிப்பாய்க் கேட்கின்றேன்

துடிக்கும் இதயத்துள் ஒரு ஓசை

என் உயிரின் ஓசையாய்க் கேட்கின்றேன்


நான் இரசிக்கும் பாடல்வரிகள் யாவும்

உனக்கானவையாய் தோன்றிடுதே

மீண்டும் மீண்டும் மீட்டிடும் வரிகளில்

ஓராயிரம் முறை உன்னோடு வாழ்கின்றேன்


நான் வாங்கும் மூச்சுக்காற்றை 

உனக்காகவும் கொஞ்சம் சேமிக்கின்றேன் 

நீ வந்து என்னோடு வாழும் காலம்

உன் மூச்சில் உயிர் வாழ யாசிக்கின்றேன்


Monday, January 24, 2022

கல்லறைப்பூ

 


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் இறைவா உந்தன் மாலையாக மாட்டேனா

ஒரு நாள் உந்தன் பூஜைக்கு உகந்தவளாக மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் உந்தன் கரிசணைதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் திருமணமாலையாக மாட்டேனா

ஒரு நாள் மணவறை கண்டு பூத்துக்குலுங்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் மணமாலையாகிடும் மகிழ்ச்சிதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் காதலின் அன்புப் பரிசாயாக மாட்டேனா

ஒரு நாள் காதலன் கையில் தவழ மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் காதலின் வரம்தான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் சூடிக்கொள்ள கூந்தல் காண மாட்டேனா

ஒரு நாள் கூந்தலை அலங்கரிக்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் சூடிக்கொள்ளும் வாய்ப்புதான் கிடைக்காதா


முட்களைக்கொண்டு உதிரம்கண்டு 

பறித்திடும் கரங்களை வருத்திடத் தெரியாதே

வண்டுகள் வேறு வண்ணத்துப்பூச்சிகள் வேறு

பிரித்துப் பார்த்திட மனமும் நினைக்காதே

சேற்றில் முளைத்த செந்தாமரையும்

களங்கமற்றதாய் வாகை சூடிடுமே

காகிதப்பூக்களில் வாசம் வருமா 

பந்தலில் பவளமாய் படர்ந்திருக்கிறதே


கல்லறையில் பூத்த பாவத்தினைப் புதைத்திட

குப்பை மேட்டில் எனக்காய் ஓர் இடம் கிடைத்திடுமா

கல்லறையில் பூத்த தீட்டினை கழுவிட

கங்கை நீரும் என்னைப் புனிதமாக்கிடுமா

மனிதனின் கைகளில் வந்து சேர்வதனால் 

மலரிடமும் வர்ணம் தோன்றிடுதே

கல்லறை கொண்ட ஈரம்

கடவுளும் ஏனோ என்னில் காட்டவில்லை


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...